AirMedia Logo
All News
Radio listeners of Kanyakumari district, listen, listen—keep on listening

Radio listeners of Kanyakumari district, listen, listen—keep on listening

HighlightedFM Radio1 view

கன்னியாகுமரி மாவட்ட வானொலி நேயர்கள் இனி கேளுங்க கேளுங்க, கேட்டுக்கிட்டே இருங்க

கன்னியாகுமரி மாவட்ட வானொலி நேயர்களுக்கு இன்றைய காலை பெய்த குளிர்மழையைப் போல ஓர் அற்புதமான குளிர்ந்த மகிழ்ச்சியான செய்தி கிடைத்திருக்கிறது.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக நாம் தவம் கிடந்து எதிர்பார்த்த சூரியன் FM இன்று காலை 9 மணி முதல் நாகர்கோவிலில் தனது வானொலி ஒலிபரப்பை தொடங்கியிருக்கிறது.

எத்தனை ஆண்டுகால எதிர்பார்ப்பு, எவ்வளவு பேராவல், எத்தனை இனிமையான பழைய நினைவுகள்.

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு வானொலி கேட்பதற்கு நாகர்கோவில் வானொலி ஒலிபரப்பைத் தவிர வேறு வாய்ப்புகள் இல்லாத காலத்தில் திருநெல்வேலியில் சூரியன் FM தனது வானொலி ஒலிபரப்பை தொடங்கியது.

ஆனால் அது குமரி மாவட்டத்தில் கேட்கவில்லை என்பது எங்களுக்கு பெருத்த ஏமாற்றமாக இருந்தது.

நாகர்கோவில் வானொலி ஒலிபரப்பு இல்லாத நேரங்களில், என் மாமா வீட்டின் மொட்டை மாடியிலும், தென்னை மரத்தடியிலும், வீட்டின் வாசலிலும் அமர்ந்து கொண்டு, என் மச்சான் Jainul Arif அவர்கள் வளைகுடாவில் இருந்து கொண்டு வந்து தந்த ரேடியோவை தோளில் சுமந்தபடி திருநெல்வேலியில் இருந்து வந்த சூரியன் FM வானொலி ஒலிபரப்பை கேட்டு நெஞ்சுருகிய நாட்கள் இன்றும் பசுமையான நினைவுகளாக இருக்கின்றன.

இலங்கையில் இருந்து வரும் வானொலி ஒலிபரப்புகளைக்கூட அபாரமான ஆற்றலுடன் ஈர்க்கும் தன்மை கொண்ட அந்த பேட் ரேடியோவை வைத்து, வேகாத வெயிலையும் பொருட்படுத்தாமல் மொட்டை மாடியில், தென்னை மரத்தடியில், வீட்டின் வாசலில் என்று இடம் மாறி மாறி நின்று பகல் முழுவதும் சூரியன் FM வானொலி ஒலிபரப்பை கேட்ட நாட்கள் அவை.

ஆனால் மாலை நேரத்தில் நாகர்கோவில் வானொலி ஒலிபரப்பு தொடங்கிவிட்டால் திருநெல்வேலியில் இருந்து வரும் சூரியன் FM வானொலி ஒலிபரப்பு கேட்காது.

அதனால் மறுநாள் காலை நாகர்கோவில் வானொலி ஒலிபரப்பு முடியும் வரை காத்திருந்து, சரியாக 10 மணியளவில் மீண்டும் மாமி வீட்டை நோக்கி ஓடிச்சென்று, விடுமுறை நாட்கள் முழுவதும் காலை முதல் மாலை வரை அங்கேயே வாழ்ந்த அந்த வானொலி நாட்கள் இன்று நினைத்தாலும் மனதை நெகிழச் செய்கின்றன.

அது வெறும் வானொலி கேட்கும் பழக்கம் அல்ல.

அது ஒரு காலத்தின் காதல்.

அது ஒரு தலைமுறையின் வானொலி நினைவு.

அது தொலைதூரத்தில் ஒலித்த ஒரு குரலை நம்முடையதாக உணர்ந்த காலம்.

இன்று அந்த நீண்ட காத்திருப்புக்கு ஒரு அழகான முடிவு கிடைத்திருக்கிறது.

குமரி மாவட்டத்தில் மத்திய அரசின் ஒலிபரப்பு பகிர்வு திட்டத்தின் கீழ் கோணம் பகுதியில் இயங்கி வரும் அரசு வானொலி நிலையத்தின் ஒலிபரப்பு கோபுரத்தை பகிர்ந்து கொண்டு சூரியன் FM தனது புதிய அலைவரிசை ஒலிபரப்பை நாகர்கோவிலில் தொடங்கியிருக்கிறது.

சூரியன் FM தனது 93.5 MHz அலைவரிசையின் மூலம் குமரி மாவட்ட வானொலி நேயர்களை சென்றடையத் தொடங்கியுள்ளது.

அதேபோன்று மாலைமலர் மற்றும் தினத்தந்தி குடும்பங்களின் சார்பில் இயங்கி வரும் Hello FM நிறுவனமும் இதே ஒலிபரப்பு பகிர்வு திட்டத்தின் கீழ் நாகர்கோவிலில் தனது சோதனை வானொலி ஒலிபரப்பை தொடங்கியிருக்கிறது.

குமரி மாவட்டத்தில் புதியதாக உருவாகியிருக்கும் இந்த FM வானொலி ஒலிபரப்பு சூழல் வானொலி காதலர்களுக்கு நிச்சயமாக ஒரு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தும்.

நாகர்கோவிலில் ஏற்கனவே அரசு வானொலியின் குமரி FM 101.0 MHz அலைவரிசையில் தனது வானொலி ஒலிபரப்பை வழங்கி வருகிறது.

இப்போது சூரியன் FM மற்றும் Hello FM ஆகியவற்றின் வருகையால் குமரி மாவட்டத்தின் FM வானொலி உலகம் இன்னும் உயிர்ப்புடன் இயங்குவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

கடந்த நான்கைந்து ஆண்டுகளாக குமரி வானொலியை கேட்கும் பழக்கத்தை விட்டு முழுமையாக வெளியேறிவிட்டேன் என்று கூட சொல்லலாம்.

அதற்குக் காரணம் அரசு வானொலி ஒலிபரப்பில் உள்ளூர் தயாரிப்புகளுக்கும் உள்ளூர் நிகழ்ச்சிகளுக்கும் போதிய முக்கியத்துவம் வழங்கப்படாமல், சென்னை உள்ளிட்ட பிற மையங்களில் இருந்து பெறப்படும் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பும் பணிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாக நான் உணர்ந்ததுதான்.

ஒரு காலத்தில் அரசு வானொலி என்பது அந்தந்த மண்ணின் குரலாக இருந்தது.

அந்த மண்ணின் மொழிநடை இருந்தது.

அந்த மக்களின் வாழ்க்கை இருந்தது.

அந்த ஊரின் செய்தி இருந்தது.

அந்தப் பகுதியின் கலைஞர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்களின் குரல்கள் வானொலியில் ஒலித்தன.

ஆனால் காலப்போக்கில் உள்ளூர் தயாரிப்புகளுக்கு போதிய முக்கியத்துவம் இல்லாத நிலை உருவானது.

அந்த சூழலில் குமரி மண்ணிலிருந்து குமரி மக்களுக்காக, குமரி மக்களின் பங்களிப்போடு புதுமையான நிகழ்ச்சிகள் உருவாகி ஒலிக்க வேண்டும் என்பதே வானொலி நேயர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்த புதிய FM வானொலி வரவு அந்த எதிர்பார்ப்புக்கு ஒரு புதிய வாய்ப்பை உருவாக்கட்டும்.

குறிப்பாக சூரியன் FM மற்றும் Hello FM போன்ற தனியார் FM வானொலிகள் குமரி மாவட்டத்தின் தனித்துவமான பண்பாடு, மொழி, கலை, கல்வி, தொழில், இளைஞர்கள், பெண்கள், விவசாயம், மீனவர் வாழ்க்கை, வணிகம் மற்றும் சமூக மாற்றங்களை தங்களது நிகழ்ச்சிகளில் பிரதிபலிக்க வேண்டும்.

உள்ளூர் கலைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும்.

உள்ளூர் திறமைகளுக்கு குரல் கிடைக்க வேண்டும்.

குமரி மக்களின் கதைகள் குமரி மக்களின் குரலிலேயே உலகம் முழுவதும் ஒலிக்க வேண்டும்.

அப்போதுதான் இந்த புதிய வானொலி வரவு வெறும் புதிய அலைவரிசைகளின் வரவாக இல்லாமல் குமரி மக்களின் குரலுக்கான புதிய வாசலாக மாறும்.

இன்று நாகர்கோவில் மண்ணில் சூரியன் FM தனது வானொலி ஒலிபரப்பை தொடங்கியிருப்பதும் Hello FM தனது சோதனை வானொலி ஒலிபரப்பை தொடங்கியிருப்பதும் குமரி மாவட்ட வானொலி வரலாற்றில் நினைவுகூரத்தக்க ஒரு புதிய நாளாகும்.

இது வெறும் இரண்டு FM வானொலி சேவைகளின் வருகை அல்ல.

பல ஆண்டுகளாக வானொலியை நேசித்த ஒரு தலைமுறையின் நீண்டநாள் கனவுக்கு கிடைத்த இனிய பதில்.

ஒரு காலத்தில் தொலைதூரத்தில் இருந்து வரும் சூரியன் FM வானொலி ஒலிபரப்பை கேட்பதற்காக வெயிலில் மொட்டை மாடியில் பேட் ரேடியோவை தூக்கிக்கொண்டு நின்ற அந்த சிறுவயது நினைவுகளிலிருந்து, இன்று நாகர்கோவிலிலேயே சூரியன் FM வானொலி ஒலிபரப்பை கேட்கும் நிலைக்கு நாம் வந்திருக்கிறோம்.

அந்த மாற்றத்தை நினைக்கும்போது வானொலி என்பது வெறும் ஓர் ஒலிபரப்பு சாதனம் அல்ல என்பதும் புரிகிறது.

அது நினைவுகளோடு பயணிக்கும் ஓர் உயிருள்ள ஊடகம்.

அது குரல்களை இணைக்கும் ஒரு பாலம்.

அது தனிமையில் இருப்பவர்களுக்கு ஒரு துணை.

அது பயணிக்கும் மனிதனுக்கு ஒரு நண்பன்.

அது ஒரு தலைமுறையின் நினைவுகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் அற்புதமான ஊடகம்.

இனி குமரி மக்களுக்கு இசை உலகின் இன்ப அனுபவம் இன்னும் நெருக்கமாக கிடைக்கட்டும்.

புதிய குரல்கள் ஒலிக்கட்டும்.

புதிய நிகழ்ச்சிகள் உருவாகட்டும்.

உள்ளூர் திறமைகள் வெளிச்சத்திற்கு வரட்டும்.

குமரி மண்ணின் குரல் FM வானொலியில் இன்னும் வலிமையாக ஒலிக்கட்டும்.

நாமும் இந்த புதிய வானொலி பயணத்தோடு இணைந்து செயல்படும் உடன்பாட்டில் இருக்கிறோம்.

குமரி மாவட்ட வானொலி காதலர்களுக்கு இனி காத்திருப்பு இல்லை.

தொலைதூரத்தில் இருந்து வரும் வானொலி ஒலிபரப்பை தேடி மொட்டை மாடியில் நிற்க வேண்டிய அவசியமும் இல்லை.

நம்முடைய நாகர்கோவிலிலேயே நம்முடைய காதலுக்குரிய சூரியன் FM ஒலிக்கிறது.

அதோடு Hello FM வானொலி ஒலிபரப்பும் புதிய அனுபவத்தைத் தர வருகிறது.

வானொலி மீதான நம் காதல் மீண்டும் புத்துயிர் பெறட்டும்.

குமரி மண்ணின் குரல் மீண்டும் வானொலியில் முழங்கட்டும்.

நீண்ட நாட்களாக வானொலியை எதிர்பார்த்து காத்திருந்த அனைத்து கன்னியாகுமரி மாவட்ட வானொலி நேயர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

கேளுங்க கேளுங்க.

கேட்டுக்கிட்டே இருங்க.

For news tips, coverage requests, or media enquiries, email us at airmedianews@gmail.com.